Rock Fort Times
Online News

திருச்சி, அரியமங்கலத்தில் சுரங்கப்பாதை பிரச்சனை தொடர்பாக தென்னக இரயில்வே கோட்ட மேலாளரிடம் துரை வைகோ எம்பி முறையீடு …!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி கோட்ட மேலாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்து முறையிட்டார் அதில் திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் சுமார் 15,000 பேர் வசித்து வருகிறார்கள். அரியமங்கலத்தை இரண்டாகப் பிரிக்கும் திருச்சி-சென்னை இரயில்வே தடத்தை கடக்கும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க, தென்னக இரயில்வே அப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமே தவிர, இரயில்வே தடத்தின் இருபுறமும் வாழும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும், உணர்வுபூர்வமான வழிபாட்டுத் தேவைகளையும் பாதிக்கும். இரயில்வே தடத்தைக் கடப்பதற்காக மக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், ரேஷன் கடைகளுக்குச் செல்பவர்கள், கபர்ஸ்தானுக்கு உடல்களை எடுத்துச் செல்பவர்கள் உள்ளிட்ட முக்கியத் தேவைகளுக்காக இரயில்வே தடத்தைக் கடக்க வேண்டியுள்ளது. ஆகவே, சுரங்கப்பாதையை அமைக்க, யாருக்கும் பாதிப்பு இல்லாமல், தேவையான அளவு நிலத்தை மட்டும் கையகப்படுத்தி, விரைவில் இதை நிறைவேற்ற வேண்டும். சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும்போது ஊர்ப் பெரியவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. அதற்கு கோட்ட மேலாளர், மக்களின் ஒப்புதல் பெறப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்படும் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்படாது என்றும், ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின்போது,கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டலக் குழுத் தலைவருமான மு.மதிவாணன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ரொகையா மாலிக், மதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாவட்ட துணை செயலாளர்கள் அப்பீஸ் முத்துக்குமார், துரை வடிவேல், எல்லக்குடி அன்புராஜ், வைகோ உதவியாளர் வெ.அடைக்கலம், பகுதி செயலாளர்கள் காட்டூர் ஜெயச்சந்திரன், புத்தூர் கோபாலகிருஷ்ணன், ஜங்ஷன் எஸ்.பி. செல்லத்துரை, பொன்மலை எப்.எஸ்.ஜெயசீலன், ஏர்போர்ட் வினோத், உறையூர் ஆசிரியர் முருகன், ரயில்வே செழியன், பொதுக்குழு உறுப்பினர் அச்சகம் செல்வராஜ், வட்ட செயலாளர்கள் சரவணன்,எல். ஐ.சி. செந்தில், இணையதள அணி ஸ்டீபன் சுரேஷ், அம்பிகாபதி, ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்தை துரை வைகோ எம்பி நேரில் பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்