Rock Fort Times
Online News

ரெங்கா, ரெங்கா… கோவிந்தா, கோவிந்தா…- பக்தி கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்…!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்குனி தேரோட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி தேர் திருவிழா இம்மாதம் ஏப்ரல் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷ வாகனம், கற்பகவிருட்ச வாகனங்களில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் 7-ம்நாள் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாள் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் கோ ரதம் அருகே வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று(12-04-2025) பங்குனி கோரதம் எனப்படும் தேரோட்டம் நடைபெற்றது. கிழக்கு சித்திரைவீதியில் உள்ள கோ ரத்தில் மூலஸ்தானத்திலிருந்து முத்துப்பாண்டியன் கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், ரத்தின காது காப்பு, நீலநாயக்க பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரெங்கா, ரெங்கா…கோவிந்தா, கோவிந்தா… பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரைவீதி, வடக்கு சித்திரை வீதி என நான்கு வீதிகளில் தேர் அசைந்தாடி சென்றது. பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேரோட்டத்தை ஒட்டி ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்