கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பலரும் செயற்கை நுண்ணறிவு மூலமாக ஜிப்லி ஆர்ட் எனப்படும் ஏ.ஐ புகைப்படங்களை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்த ஜிப்லி செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மூலம், புகைப்படத்தில் உள்ள முகங்களை அனிமேஷன் போன்று எடிட் செய்து பொதுமக்கள் பலரும் ரசித்து வருகின்றனர். ஆனால் இந்த ஜிப்லி ஆட்டில் உள்ள ஆபத்துகளை பொதுமக்கள் புரிந்துகொள்வதில்லை. தங்கள் செல்போனில் உள்ள போட்டோக்களை ஜிப்லி புகைப்படங்களாக மாற்றுவதற்கு ஏ.ஐ செயலிகளிடம் செல்போனில் உள்ள பயோமெட்ரிக் தரவுகளை அனுமதிக்கின்றனர். அவை பல்வேறு இணையதள மோசடிகளுக்கு வழிவகுக்கும். எனவே,இந்த விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது என தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும்போது., ஜிப்லியின் கலைப்படைப்புகளை அங்கீகரிக்கப்படாத அப்ளிகேஷன் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற செயலிகள் மூலம் பரப்பும் போது சைபர் கிரைம் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. மேலும் அங்கீகரிக்கப்படாத தளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் அதை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மேலும் டீப் ஃபேக் மூலம் உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்கள் இத்தகைய விஷயங்களில் சிக்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன்பு,அந்த இணையதள லிங்கின் நம்பகத்தன்மையை சரி பார்ப்பது நல்லது.ஒருவேளை உங்களுக்கு சைபர் கிரைம் குறித்த புகார்களை தெரிவிக்க விரும்பினால் கட்டணமில்லாத உதவி எண்ணான 1930-யை அழைக்கவும். அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியிலும் புகார்களை பதிவிடலாம் என தெரிவித்துள்ளனர்.

Comments are closed.