Rock Fort Times
Online News

திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகிலேயே மர்ம நபர்கள் அட்டூழியம்:- பட்டப்பகலில் முதியவரிடம் பணம் பறிப்பு…! (வீடியோ இணைப்பு)

திருச்சி சிட்டி பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் காந்தி மார்க்கெட் காவல் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குதான் காந்தி மார்க்கெட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வடநாட்டுக்காரர்கள் தொழில் செய்யும் முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் காந்தி மார்க்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி சிலர் பணத்தை வழிப்பறி செய்வதாக ஏற்கனவே பொதுமக்கள் தரப்பில் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் காந்தி மார்க்கெட் வெளிப்புற பகுதியில் முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற 3 இளைஞர்கள் திடீரென அந்த முதியவரை வழிமறித்தனர். அவர்களில் இரண்டு இளைஞர்கள் முதியவரின் இரண்டு கைகளையும் மடக்கி பிடித்துக் கொள்ள ஒரு இளைஞர் முதியவரின் சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். பட்டப்பகலில் மர்ம நபர்கள் செய்த இந்த அட்டூழியத்தை அங்கிருந்தவர்கள் யாரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை. குறிப்பாக, திருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் தான் காந்தி மார்க்கெட் காவல் நிலையம் உள்ளது. முதியவரிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடும் 3 இளைஞர்களின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சிலர் கூறுகையில், இது போன்ற சம்பவம் இன்று… நேற்றா…நடக்கிறது. பலமுறை அரங்கேறி உள்ளது. காந்தி மார்க்கெட்டில் இரவு நேரங்களில் பூட்டி உள்ள கடைகளின் கதவுகளை உடைத்தும் பணம் திருடப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் வெளியே வரும் அவர்கள் தொடர்ந்து அதே குற்றங்களையே திரும்பத் திரும்ப செய்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று ஆதங்கப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்