திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வளாகம் மற்றும் வகுப்பறைகளில் இரவு நேரங்களில் சிலர் புகுந்து மது அருந்துவது மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. அவர்களை கையும், களவுமாக பிடிக்க ஆசிரியர் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று (ஏப்ரல் 5) அதிகாலை பள்ளிக்கு திடீரென ‘விசிட்’ அடித்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்தனர். அவர்களை வெளியே அழைத்த ஆசிரியர் குழுவினர் நீங்கள் யார் ?, எப்படி உள்ளே வந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அப்போது அந்த வாலிபர் மது போதையில் இருந்தாராம். அவர் நாங்கள் கணவன்- மனைவி தான் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெனாவட்டாக கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியர் குழுவினர், நீங்கள் இரவு தங்குவதற்கு இது என்ன லாட்ஜா?, மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் இப்படியா நடந்து கொள்வது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த வாலிபர், தவறுதான். மன்னித்துக் கொள்ளுங்கள் இனி வரமாட்டேன் என்று கூறியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர், இதில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் யார் என்பது போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிக்குள் பெண்ணுடன் தங்கி இருந்த நபர் லால்குடி பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (27) என்பது தெரியவந்தது. அவரை லால்குடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தான், மது போதையில் இருந்ததால் பள்ளி என்று தெரியாமல் தனது மனைவியை அழைத்து வந்து விட்டதாகவும் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்தனர். அந்தப் பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Comments are closed.