கடலில் கப்பல் செல்வதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ரயில் செல்வதை கேள்விப்பட்டு இருக்கிறோமா? ஆம்! மும்பை மற்றும் தமிழகத்தில் ராமேஸ்வரம் பகுதிகளில் கடலுக்கு இடையே ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு உள்ளன. இது உலக அளவில் வியக்கக் தகுந்த சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம். இதற்கான பணிகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டில் முடிக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதிக உயரம் கொண்ட படகுகள் மற்றும் கப்பல்கள் இந்த வழியாக செல்லும் விதமாக பாலத்தின் நடுப்பகுதி மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2054 மீட்டர் நீளத்தில், 146 தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு 145 இரும்பு கிர்டர்கள் பொருத்தப்பட்டு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதன் முதலாக ரயில் போக்குவரத்து தொடங்கியது. இது 1988ஆம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவுக்கும், மண்டபத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது. 1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் பாலத்தை புரட்டி போட்டதில் 124 துாண்கள் சேதமடைந்தன. தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் புகழ்பெற்ற பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் தொழிலாளர்கள் 67 நாட்களில் புதுப்பித்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கினர். கடந்த 2022 நவம்பர் 23-ல் பாம்பன் தூக்கு பாலத்தின் தூண்கள் பலமிழந்தது. இதையடுத்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ. 550 கோடி நிதி ஒதுக்கியது. அதில், புதிய பாம்பன் பாலம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலம் ஆகும். புதிய பாலம் சுமார் 2.2 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்திற்கு அதை உயர்த்த முடியும். இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(06-04-2025) திறந்து வைத்தார். இதன்மூலம் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Comments are closed.