திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்… * அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தின் சார்பில், திருச்சி மண்டலத்தில் 4 நகரப் பேருந்துகள், 6 புறநகர் பேருந்துகள் என புதிய பிஎஸ் .6 ரக பேருந்துகள் இயக்கத்தின் தொடக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த புதிய பேருந்துகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்ததோடு ஒரு பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார். இந்த 10 புதிய பேருந்துகளில், 4 நகர பேருந்துகளானது தீரன் நகர் கிளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கிளையின் மூலம் திருச்சி சத்திரம் பேருந்துநிலையம்- மத்திய பேருந்துநிலையம் வழித்தடத்தில் 4 புதிய பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல, புறநகர் பேருந்துகளுக்காக வழங்கப்பட்ட 6 புதிய பேருந்துகளில் 3 பேருந்துகள் திருச்சி புறநகர் கிளைக்கும், 3 பேருந்துகள் கண்டோன்மென்ட் கிளைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை, திருச்சி-சென்னை மார்க்கத்தில் 2 பேருந்துகள், திருச்சி- சேலம் மார்க்கத்தில் ஒரு பேருந்து, திருச்சி- வேளாங்கண்ணி மார்க்கத்தில் 3 பேருந்துகள் என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்றன.இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் வே.சரவணன், அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மாவட்ட திமுக பொருளாளர் துரைராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் துர்கா தேவி, திமுக பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ், புஷ்பராஜ், தொ.மு.ச. குணசேகரன் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed.