Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள அரசு பள்ளியில் அமர்ந்து மது அருந்திய விவகாரம்:- போலீஸ்காரர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்-திருச்சி எஸ்.பி.அதிரடி! (வீடியோ இணைப்பு)

திருச்சி திருவெறும்பூர், பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று(31-03-2025) ரம்ஜான் விடுமுறை என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அப்போது இரவு நேரத்தில் மது பாட்டில்களுடன் பள்ளிக்குள் புகுந்த ஆறு பேர், பள்ளி மைதானத்தில் அமர்ந்து மது அருந்தி விட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதனை அறிந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் வீடியோ எடுத்ததால் மது அருந்தியவர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேர் நைசாக தப்பி ஓடிவிட்டனர். மீதமுள்ள 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்திய கும்பலுடன் திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் இளையராஜாவும் ஒருவர். மற்றவர்கள் கார் ஓட்டுநர்கள் பிரபு, மகேஸ்வரன் மற்றும் ரயில்வே ஊழியர் பிரபு என்பது தெரியவந்தது. அவர்கள் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ்காரர் மணிகண்டன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்  மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போலீஸ்காரர் இளையராஜாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார். அரசு பள்ளியில் அமர்ந்து மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்