பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் பதிவு கட்டணம் குறைப்பு- * அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…!
தமிழ்நாடு சட்டசபையில் பெண்களின் முன்னேற்றங்களுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம், திருமண நிதி உதவித் திட்டங்கள், இலவச தையல் இயந்திரத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் 1 சதவீத பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, 01-04-2025 முதல், 10 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.