திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன் மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பிறகு அனைவரது முன்னிலையில் நிதிக்குழு தலைவர் முத்துசெல்வம் வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் விவரம் பின்வருமாறு:- 2024-25ம் ஆண்டில் ஏற்பட்டுள்ள, பற்றாக்குறை ரூ.105.95 கோடியினை, மாநகராட்சிக்கு நிலுவையிலுள்ள அனைத்து வரியினங்களையும் நிலுவையின்றி வசூல் செய்து ஈடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மின்விளக்குகளை பல்வேறு திறன் கொண்ட எல்.இ.டி மின் விளக்குகளாக 8264 எண்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 816 எல்.இ.டி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மாநில நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மாநில நகர்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் திருச்சி மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட மற்றும் தெருவிளக்குகள் விடுபட்ட பகுதிகளில் மொத்தம் 6264 எண்கள் எல்.இ.டி மின் விளக்குகள் ரூ.13.97 கோடி மதிப்பீட்டில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காந்தி மார்க்கெட்டை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு புனரமைக்கப் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.60 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறுவதற்கு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே பீமநகர் பகுதியில் 5 ரோஸ் திருமண மஹால் மற்றும் குழுமிக்கரையினை இணைக்கும் வகையில் வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிக்கு ரூ 2 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் உய்யக்கொண்டான் வாய்க்கால் குறுக்கே பீமநகர் பங்காளி தெரு குழுமிக்கரையினை இணைக்கும் வகையில் ரூ.2 கோடிக்கு நிர்வாக அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .
காவிரி ஆற்றின் தென்கரை பகுதியினை அழகுப்படுத்தும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.15 கோடி மதிப்பிட்டில் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். மாநகராட்சி மைய அலுவலக வளாகத்திற்குள் கூடுதல் அலுவலக கட்டிடம் மற்றும் வரவேற்பு வளைவு கட்டும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.50 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும்.
மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட்ட தோப்பு தெரு 30வது வார்டுக்கு உட்பட்ட லாரி செட், 35 வது வார்டுக்கு உட்பட்ட செந்தண்ணீர்புரம்,
57 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேட் வங்கி காலனி, 64 ஆவது வார்டுக்கு உட்பட்ட பாரி நகர், 65 க்கு உட்பட்ட பசுமை நகர் 60க்குட்பட்ட காஜாமலை, 62க்கு உட்பட்ட பழனியப்பா நகர், 58 க்கு உட்பட்ட ராஜராஜன் நகர், வசந்த் நகர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.5 லட்சம் செலவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உரிய அனுமதி பெறப்பட்டு பணிகளை தொடங்கப்படும்.
திருச்சி மாநகராட்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலைய வளாகத்தில் அலுவலகப் பணிகளுக்காக வருகை தரும் அரசு உயர் அதிகாரிகள், மத்திய, மாநில அமைச்சர்கள் தங்கிச் செல்லும் வகையில் ரூ.4.65 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை அமைக்கும் பணியினை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை ரூ.236 கோடி மதிப்பீட்டில் தயார் செய்து அரசிடம் உரிய நிர்வாக அனுமதி பெறுவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த பணிக்கு ரூ.100 கோடி நிதி திரட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் அம்ருத் புதை வடிகால் வழங்கும் திட்டம் நான்கு தொகுப்புகளாக பணிகள் நடந்து வருகின்றன. நான்காவது தொகுப்பு முடியும் பட்சத்தில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது தடைப்படும். தடைபடாத இடங்களில் சிறிய அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்தி அந்த பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீரை புதை வடிகால் குழாய்களுக்கு செல்லும் வகையும் மாற்றி அமைத்து உய்யக்கொண்டான் வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் தலா ஒரு நூலகம் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 5 மண்டலங்களிலும் இட வசதிக்கு ஏற்ப தலா ஒரு உள் விளையாட்டு அரங்கங்கள் ரூ.ஒரு கோடி செலவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முத்து செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

Comments are closed.