மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால் திமுக அரசு தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா?- திருச்சியில் கிருஷ்ணசாமி கேள்வி!
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 69 சதவீத இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டு உள்ளது. அதில் 18 சதவீதம் பட்டியலின பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வரும் அரசுகள் அதனை செய்ய தவறி விடுகிறது. 2001ல் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உள் ஒதுக்கீட்டில் அருந்ததி இனருக்கு மூன்று சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்தார். இதன்மூலம் அருந்ததியினர் சமுதாயத்தினர் மட்டும் பலன் அடைந்தனர். மாறாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் பயனடைய முடியவில்லை.இந்த பட்டியல் இனத்தில் 71 பிரிவுகளுக்கும் சரிசமமாக மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருகிற மே 14ஆம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை கொண்டு வர வேண்டும். தற்பொழுது மத்திய அரசின் மும்மொழி கல்விகொள்கையை திமுக அரசு இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறது.இதற்கு மத்திய அரசு சரியான விளக்கத்தை சொல்லவில்லை.திமுகவில் உள்ள அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை மும்மொழி அமல்படுத்தப்பட்ட பள்ளியில் படிக்க வைத்து விட்டு மாநகராட்சியில் படிக்கும் ஏழை மாணவர்களை மும்மொழி கற்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.இதுதான் சமூக நீதியா, பெரியார், அண்ணா வழியா?ஒரு மொழி கொள்கையை பின்பற்றி ஜப்பான் போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மொழி, வளர்ச்சிக்கு முக்கியமல்ல.மாறாக அறிவு தான் முக்கியம். ஆகவே மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால் திமுக அரசு தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா?. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.ஆனால் ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கனிம வள கொள்ளை மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது.வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். பிறகு திருச்சி பீமநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிய தமிழக கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் சண்முகம் மற்றும் புத்தூர் பாலு, சின்னையன், ரஞ்சித் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.