Rock Fort Times
Online News

திருச்சி பரதநாட்டிய கலைஞர் ரேவதி முத்துசுவாமிக்கு டாக்டர் பட்டம்…* டெல்லியில் 22 -ம் தேதி வழங்கப்படுகிறது

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக “ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா” என்கிற பெயரில் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருபவர் ரேவதி முத்துசுவாமி. இவரது கணவர் முத்துசுவாமி, திருச்சி தேசிய கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பரதக் கலையை தனது உயிர் மூச்சாக கொண்டுள்ள ரேவதி சுவாமியிடம் ஏராளமான மாணவ, மாணவிகள் பரதநாட்டியம் பயின்று வருகின்றனர்.
இந்திய புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் குறித்த நடன நாடகங்களை திறம்பட நடத்தி வருகிறார். இவரது குழு இந்தியா முழுவதும் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இவரிடம் பரதநாட்டியம் பயின்ற மாணவ, மாணவிகள் உலகம் முழுவதும் பரதநாட்டிய பள்ளியை தொடங்கி மற்றவர்களுக்கு பரதக் கலையை சொல்லிக் கொடுக்கும் உயரிய பணிகளை செய்து வருகின்றனர். பரத கலைக்கு இவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டி ஏற்கனவே தமிழ்நாடு அரசு “கலைமாமணி விருது” வழங்கி கௌரவித்தது. இதேபோல எண்ணற்ற விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் பரத நாட்டியத்திற்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்பு மற்றும் சாதனைக்கு பெருமை சேர்க்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு “கௌரவ டாக்டர்” பட்டத்தை வழங்க இருக்கிறது. இதற்கான விழா மார்ச் 22 ம் தேதி சனிக்கிழமை புதுடெல்லியில் உள்ள சாணக்கியபுரி, தி அசோக் ஹோட்டலில் காலை 11 மணிக்கு நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞருக்கு டாக்டர் பட்டம் கிடைப்பது பெருமைக்குரிய விஷயமாகும். ரேவதி முத்து சுவாமிக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரை முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.நீங்களும் அவரை பாராட்ட விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் இதுதான் 94424 64432.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்