திமுகவினரோடு சேர்ந்து கொண்டு செயல்படுவதா?- திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி செம “டோஸ்” கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை…!
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அதிமுக கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளுக்கு சென்று அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக நிர்வாக ரீதியாக 82 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, கட்சி பணிகள் எவ்வாறு நடக்கிறது? கட்சியில் இளைஞர்கள் எத்தனை பேரை சேர்த்து உள்ளீர்கள், பூத் கமிட்டியின் நிலவரம் என்ன என கேட்டு அறிந்து வருகிறார். மேலும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூறி வருகிறார். அந்தவகையில் இன்று(09-03-2025) திருச்சி மாநகர் மற்றும் வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்களோடு வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசனிடம், உங்களுக்குரிய சட்டமன்ற தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனை கண்டறிந்து தடுக்க தவறியது ஏன் என கேள்வி எழுப்பினார்.
கட்சியில் இளைஞர்கள் சேர்க்கையும் குறைவாக இருக்கிறதே? என கேள்வி எழுப்பினார். தெற்கு மாவட்ட செயலாளர் குமாரிடம், எதுவும் பேசாமல் நன்றி என்று ஒரு வார்த்தை மட்டும் பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதியிடம் , தாங்கள் 2 அமைச்சர்களுடன் இணைந்து செயல்படுவதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன. இதுபோன்று தொடர்ந்து செயல்பட்டால் கட்சி மேலிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தெரிவித்தார். மொத்தத்தில் திருச்சி மாவட்டம் கட்சி செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும், ஜெயலலிதா இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. இனியும் திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு கடைசி எச்சரிக்கை எனத் தெரிவித்தார். அதிமுகவுக்கு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் இளைஞர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அவர்களை கட்சியில் சேர்க்க தீவிரம் காட்ட வேண்டும். திமுகவினரோடு தொடர்பில் இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். திருச்சி மீண்டும் அதிமுகவின் கோட்டையாக மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய திருச்சி அதிமுக நிர்வாகிகள், நாங்கள் சிறப்பாக செயலாற்றி அதிமுகவை 2026ல் வெற்றி பெற வைப்போம் என உறுதியளித்தனர்.
Comments are closed.