Rock Fort Times
Online News

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை சௌந்தரராஜன் கைது- அண்ணாமலை கண்டனம்…!

மும்மொழி கொள்கை தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. மும்மொழிக் கொள்கையை கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்று பாஜக எதிர் கேள்வி கேட்கிறது. மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுகவும், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதாவும் பொது மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் பாரதிய ஜனதா கட்சியினர் சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கினர். பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கையெழுத்து இயக்கத்தை இன்று (மார்ச் 6) தொடங்கி வைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதி இல்லாமல் கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளீர்கள், போலீசாரிடம் முறையாக அனுமதி பெற வேண்டாமா? என்று கேட்டனர். இதுதொடர்பாக போலீசாருக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனுமதி பெறாமல் கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தபோது தமிழிசை கூறுகையில், சாமானிய மக்களிடமே கையெழுத்து வாங்குகிறோம். இதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும். என்னை ஏன் தீவிரவாதி போல போலீசார் சுற்றி உள்ளனர் என்பது எனக்கு புரியவில்லை என்றார். பின்னர் அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தமிழிசை கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பா.ஜ., சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் கவர்னர் தமிழிசையை போலீசார் கைது செய்துள்ளனர்.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் தி.மு.க.,வின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. தி.மு.க.,வின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும் ஆகும். இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.,வினர் பயந்து பின்வாங்கப் போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதல்வர் அவர்களே? தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

                   ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்