Rock Fort Times
Online News

திருச்சி, கே.கே.நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் டிரான்ஸ்பரை திரும்ப பெற வேண்டும்- ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்…!(வீடியோ இணைப்பு)

திருச்சி, கே.கே.நகர் பகுதியில் அரசு மாநகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அழகு சுந்தரம் என்பவர் பணியாற்றினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு தாமதமாக மாணவன் ஒருவனை பள்ளித் தலைமை ஆசிரியர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தான். அதன்பேரில் மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம், “எங்கள் பிள்ளையை எப்படி அடிக்கலாம்” என்று கேட்டு வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலைமை ஆசிரியர், அந்த மாணவனின் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியரை டிரான்ஸ்பர்  செய்து நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவரை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்று கூறி அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று(05-03-2025) பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் தான் தலைமை ஆசிரியர் கண்டித்தார் என்றும், அவரது பணியின் போது மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகவும் அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று தெரிவித்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் சாலை சாலை மறியலை கைவிட்டு பள்ளியின் அருகே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களிடம் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்