Rock Fort Times
Online News

சீமான் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை- சுப்ரீம் கோர்ட்டு…!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த ஐகோர்ட்டு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில், 12 வாரங்களுக்குள் புலன்விசாரணையை போலீசார் நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று(03-03-2025) விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பின் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “நடிகை ஏற்கெனவே 3 முறை வழக்கை திரும்ப பெற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், புலன் விசாரணை தொடரட்டுமே என்று கூறியதுடன், இழப்பீடு வழங்க ஏதேனும் வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர். இழப்பீடு தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்று கூறியதுடன், வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துஉத்தரவிட்டனர். அத்துடன், இரு தரப்பும் பேசி தீர்வு காண 2 மாதங்கள் அவகாசமும் வழங்குவதாக தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவின் மூலம், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு சீமான் தரப்புக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்