திருச்சி, சமயபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் “வீலிங்” செய்த வாலிபரை தட்டித் தூக்கியது காவல்துறை…! ( வீடியோ இணைப்பு)
இன்றைய நாகரீக உலகில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் சில வாலிபர்கள் சாகசம்( வீலிங்) என்கிற பெயரில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்புச்சுவரில் வாலிபர் ஒருவர் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த சாகச நிகழ்ச்சியால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தகுதி நடவடிக்கை எடுத்து சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்யக்கோரி கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அந்த வாலிபரை போலீசார் கண்டறிந்து அவரை கைது செய்ததோடு எச்சரிக்கை செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும், இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால், இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் ஆபத்தான முறையில் சாகசம் செய்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வ நாகரத்தினம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், சமயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அந்த வாகன பதிவு எண்ணை வைத்து திருச்சி எடமலைப்பட்டி புதூர்,துரைசிங்கம் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (28) என்பவரை கைது செய்தனர். அவரது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சென்ட்ரிங் தொழிலாளி என்பதும், இதுபோன்ற சாகஸங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி ஜாமீனில் விடுவித்தனர். அந்த வாலிபர் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Comments are closed.