சமயபுரத்தில் மார்ச் 5-ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொழில் முனைவோருக்கான மாபெரும் முகாம்!- பெரம்பலூர் அருண்நேரு எம்.பி அழைப்பு…
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மார்ச் 5-ம் தேதி( புதன்கிழமை) தொழில் முனைவோருக்கான மாபெரும் முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் படியும், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலோடு திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர், குளித்தலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனம் வளர்ச்சிக்காக மாபெரும் முகாம் 5-ந்தேதி காலை 10 மணியளவில் சமயபுரத்தில் உள்ள ரெட்டியார் மஹாலில் நடைபெற உள்ளது. இதில் வாழை ஆராய்ச்சி நிறுவனம், தொழில் குழுமங்கள், வங்கியாளர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், துறை அலுவலர்கள் பங்கேற்று தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை விளக்கி கூற உள்ளனர். தொழில் முனைவோருக்கான அனைத்து விதமான சந்தேகங்கள், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள், வணிகம் செய்ய வேண்டிய முறை, வங்கிக்கடன் பெற தேவையான ஆவணங்கள், அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள் உட்பட அனைத்து சந்தேகங்களுக்கும் முறையான தீர்வுகள் வழங்கப்பட்டு தொழிலில் வெற்றி பெற வழிகாட்டப்படும்.
இது மட்டுமன்றி, பல்வேறு அரசுத் துறைகள் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை காட்சிப்படுத்த உள்ளனர். வெற்றி பெற்ற தொழில் முனைவோர் தங்களது அனுபவங்களை எடுத்துக் கூறி தேவையான வழிகாட்டுதல்களை கூற இருப்பதால் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் இந்த மாபெரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.