Rock Fort Times
Online News

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்கள்…!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டிலான 110 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்கள். தொடர்ந்து, அலிம்கோ மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் சமுதாய பொறுப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் 303 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள் பல்வேறு வகையான ஊன்றுகோல்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள், தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அன்றாட வாழ்வியலுக்கான உபகரணங்கள், பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செல்போன், பிரெய்லி கிட், அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்கள், காதுக்குப்பின் அணியும் காதொலி கருவி, காலிபா, செயற்கை அவயங்கள் (கை, கால்) என பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து ஓரிட சேவை (one stop center) மையத்திற்கு வரஇயலாத சிறப்பு குழந்தைகளுக்கு இல்லம் தேடி பேச்சு பயிற்சி, தசைப்பயிற்சி, கண் மற்றும் செவிதிறன் பரிசோதனை உள்ளிட்ட சேவைகளை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வாகனத்தினை அமைச்சர்கள் பார்வையிட்டு அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எல்.கே.ஜா, தலைமை பொது மேலாளர் டி.பாலகிருஷ்ணா நாயக், அலிம்கோ நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் ரிசாத், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்