சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம்.
முதல்வர் அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் நன்றி!
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஒரு செய்தியை நேற்று சட்டசபையில் வெளியிட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கும் முதலில் எங்களின் மனமார்ந்த நன்றி. தமிழக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை 2020-21-ம் ஆண்டுகளுக்கு பிறகு, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. 2022-ல் 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி மேலும் தொடர்ந்து தமிழ் சினிமா துறை ரூபாய் 5,000 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் துறையாக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தைகைய வளர்ச்சியை எட்ட முட்டுக்கட்டையாக இருப்பது, தமிழ் நாட்டில் ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பல படங்கள் (சமீபத்தில் அண்ணாத்தே, பொன்னியின் செல்வன், வலிமை, துணிவு, வாரிசு) தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் ஸ்டுடியோக்களில் தயாரானவை. 2023-24-லும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் தென்னிந்தியாவுக்கு ஸ்டூடியோ வசதிகளில் முன்னோடியாக இருந்த தமிழ் நாடு, இன்று அண்டை மாநிலங்களை அத்தகைய வசதிகளுக்கு எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்கள் படப்பிடிப்பு அதிக நாட்கள் நடத்தப்படும்போது, அதற்காக ஆகும் அத்தனை செலவுகளும் அந்த மாநிலத்தின் வருமானத்தில் கூடுகிறது. அங்கே இருக்கும் வேலையாட்களுக்கே வேலை கிடைக்கும் சூழ்நிலையும் உள்ளது. இந்த நிலைமை மாற, சென்னை மாநகரத்தில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதிய ஸ்டுடியோக்கள் நிறுவப்பட வேண்டும். சென்னை மாநகரத்தில் தற்போது உள்ள நான்கு, ஐந்து தனியார் ஸ்டுடியோக்கள் வளர்ந்து வரும் தமிழக ஊடக, பொழுதுபோக்கு துறைக்கு போதாது. எனவே, விரைவில் புதிய ஸ்டுடியோக்கள் சென்னை மாநகரத்தில் வருவது மிக முக்கியம். சென்னை மாநகரத்தை சுற்றி 50 கிலோமீட்டர் தூரத்திற்குள், ஒரு புதிய நவீன திரைப்பட நகரம் நிறுவப்பட, தமிழக அரசு உதவ வேண்டும். இதை தமிழக அரசு – தனியார் கூட்டு முயற்சியில் எளிதாக நிறுவ முடியும் என்று தமிழக அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, உடனே அதை நிறைவேற்ற இந்த புதிய நவீன திரைப்பட நகரம் உருவாக்கும் திட்டம் பற்றி அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கும் எங்கள் நன்றிகள். இந்த திட்டம் விரைவில் செயல் வடிவம் பெற்று, இந்தியாவே பார்த்து வியக்கும் ஒரு நவீன திரைப்பட நகரம் சென்னையில் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில்தலைவர் பாரதிராஜா,
துணைத்தலைவர் T.G. தியாகராஜன், பொது செயலாளர் டி.சிவா ஆகியோர் முதலமைச்சருக்கு நன்றி கூறி கடிதம் அனுப்பியுள்ளனர்.