தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று ( பிப்.28 ) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நல சங்க நிறுவனர் சகிலன், மாநில தலைவர் வெள்ளைச்சாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கோவர்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 2 லட்சத்து ,75, ஆயிரம் செட் ஆஃப் பாக்ஸ்களையும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மாத வாடகையாக ரூபாய் 30 வீதம் 36 மாதங்களுக்கு கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு இவ் ஒப்பந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். பெருகிவரும் தனியார் கட்டண சேனல்களின் விலையையும், உபகரணங்களின் விலையையும் கருத்தில் கொண்டு,கேபிள் டிவி தொழிலை சிறு தொழிலாக அங்கீகரிப்பதோடு மானிய மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்க மாநில தலைவர் வெள்ளைச்சாமி பேசும்போது., குற்ற பின்னணி உள்ள நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படுகிறது. அவர்கள் மூலம் மட்டுமே தொழிலை செய்ய வேண்டும் என ஆளுங்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் பலவிதமான சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதோடு இச்சமூக விரோத நபர்களின் தொழில் வருகையால் வகைகளிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது வாடிக்கையாக வருகிறது. எனவே இதுகுறித்து தமிழக முதல்வர் முறைப்படி விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களை பாதுகாக்க வேண்டும் என கூறினார். இதில் மாநில துணை செயலாளரும், திருச்சி மாவட்ட தலைவருமான விஷ்ணுவர்தன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Comments are closed.