Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மார்ச் இறுதிக்குள் திறக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு…!

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக கருதப்படும் திருச்சி பல்வேறு நிலைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திருச்சிக்கு என்று ஏற்கனவே மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள் இதனை கருத்தில் கொண்டு திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கான பணிகள் முடிந்து ஜனவரி மாதம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஒரு சில பணிகள் முடிவு பெறாததால் திறப்பு தேதி தள்ளிக்கொண்டே போகிறது. அந்த பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று(27-02-2025) பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், பேருந்து முனையம் திறப்பதற்கான நாள் இதுவரை இரண்டு முறை தள்ளி போய் விட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வருகின்ற மார்ச் 31ம் தேதி பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் மார்ச் 15ம் தேதிக்குள் பணிகளை முடிப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆகவே, மார்ச் மாதம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறக்கப்படும். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டாலும் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் பயன்பாட்டில் தான் இருக்கும். ஆம்னி பேருந்து நிலையம் திறக்கும் வரை அனைத்து ஆம்னி பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம் வந்து செல்லும் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்