Rock Fort Times
Online News

அடடா மாம்பழம் போச்சே ! புதுச்சேரியில் மாநில அந்தஸ்தை இழந்த பாமக!

புதுச்சேரி மாநிலத்தில் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பாமக இழந்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் நடைபெறும் தேர்தலில் அக்கட்சிக்கு மாம்பழச் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை வைத்து அந்த கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்குகிறது. குறிப்பாக தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கட்சியை நடத்த வேண்டும். அல்லது மக்களவையில் இரண்டு சதவீத சீட்டுகளைப் பெற்று இருக்கும் கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெறும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும். அதே போல மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற சட்டப் பேரவை தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளுடன் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். மக்களவை தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிபெற வேண்டும். இதன்படி தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்று தக்கவைத்துக்கொண்ட பாமக, புதுச்சேரி மாநிலத்தில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது. இதன் காரணமாக புதுவை தேர்தலில் பாமகவிற்கு மாம்பழம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே போல உத்தரப்பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பிஆர்எஸ், மணிப்பூரில் பிடிஏ, மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்பி, மிசோரத்தில் எம்பிசி ஆகிய கட்சிகள் மாநில அந்தஸ்தை இழந்துள்ளன. இந்திய அளவில் தற்போது ஆறு தேசிய கட்சிகளே உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி, மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை அந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்