முத்து செல்வம், காஜாமலை விஜய் உள்ளிட்ட 4 பேர் மீதான கட்சி ஒழுங்கு நடவடிக்கை ரத்து! அறிவித்தார் திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் !
கடந்தாண்டு மார்ச் மாதம் திருச்சி, ராஜா காலனி அருகே இறகுப்பந்து மைதான திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் கே.என் நேருவின் காரை திமுக எம்பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் வழிமறித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த கே.என் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டை முற்றுகையிட்டதோடு கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அமைச்சர் காரை வழிமறித்தது தொடர்பாக திருச்சி சிவா ஆதரவாளர்கள் 10 பேரை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர். தடாலடியாக கோர்ட் காவல் நிலையத்தில் நுழைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், கைது செய்யப்பட்டிருந்தவர்களை தாக்கினர். தடுக்க முயன்ற பெண் காவலருக்கும் காயம் ஏற்பட்டது. காவல் நிலையத்திற்குள் புகுந்து திமுகவினர் ஏற்படுத்திய வன்முறை சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை கிழப்பியது. இதையடுத்து திருச்சி மத்திய மாவட்ட திமுக துணைச்செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய் 55வது வட்ட செயலாளர் ராமதாஸ் ஆகியோரை திமுக தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில்., ‘ திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த காஜாமலை விஜ ய், முத்து செல்வம், எஸ். துரைராஜ், பெ.ராமதாஸ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு கழகத் தலைவர் அவரிடம் வகித்த கோரிக்கையை ஏற்று, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.