மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பரபரப்பு- நுழைவு வாயிலை இடித்தபோது ” டமார்” என இடிந்து விழுந்ததில் ஜேசிபி ஆபரேட்டர் பலி…! (வீடியோ இணைப்பு)
மதுரை, மாட்டுத் தாவணியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே நுழைவுவாயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நுழைவு வாயில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி இதனை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று(12-02-2025) இரவு நுழைவுவாயிலை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது இடிபட்ட நுழைவு வாயிலின் கான்கிரிட் தூண் “டமார்” என ஜே.சி.பி. இயந்திரம் மீது எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில், ஜே.சி.பி. ஆபரேட்டர் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு ஜேசிபி ஆபரேட்டர் நல்லதம்பி படுகாயம் அடைந்தார். இதனைப் பார்த்ததும் அங்கிருந்த போலீசார் மற்றும் பயணிகள் ஓடிவந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடந்த அவர்கள் இருவரையும் மீட்ட னர். பின்னர் படுகாயம் அடைந்த நல்லதம்பி, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாகலிங்கம் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நுழைவுவாயிலை இடிக்கும்போது விபத்து ஏற்பட்டு ஜேசிபி ஆபரேட்டர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை கண் கலங்க செய்துள்ளது.
Comments are closed.