Rock Fort Times
Online News

சட்ட விதிகளை திருத்திய கும்பலிடமிருந்து அதிமுக-வை மீட்கும் திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

அதிமுக-வின் சட்ட விதிகளை மாற்றிய சர்வாதிகார கும்பலிடமிருந்து அதிமுக-வை மீட்கும் மாநாடு திருச்சியில் ஏப்.24ஆம் தேதி நடைபெறவுள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கான கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று  திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில் –
தர்மயுத்தம் தொடங்கியபோது கேலி, கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இப்போது நம்மைப் பார்த்து அச்ச உணர்வுடன் திகைத்து நிற்கின்றனர். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் ஆற்றலை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே. அவரது காலத்தில் அதிமுக ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டது. கோடிக்கணக்கான தொண்டர்களை தாங்கி நிற்கும் அதிமுக வரலாற்று சிறப்பு மிக்க பெருமை கொண்டது.

தலைமையை தேர்வு செய்யும் அடிப்படை உரிமையை தொண்டர்களுக்கு வழங்கியவர் எம்ஜிஆர். உலகத்திலேயே வேறு எந்த அரசியல் இயக்கமும் வழங்காத உரிமையைப் பெற்றுத் தந்தவர் எம்ஜிஆர். திமுக-விலிருந்து தான் நீக்கப்பட்போது எழுந்த உணர்வால் இத்தகைய விதிமுறையை அதிமுக-வில் வகுத்தவர். அதனை தான் மறையும் காலம் வரை காத்து நின்றவர் ஜெயலலிதா. 16 ஆண்டு காலம் தமிழகத்துக்காக முதல்வராகவும், 30 ஆண்டுகளாக கட்சிக்காகவும் பணியாற்றி அதிமுக-வை உச்சநிலைக்கு கொண்டு சென்றதால்தான் அதிமுக-வின் நிரந்தரப் பொதுச் செயலர் என்ற பதவியை ஒன்றரை கோடி தொண்டர்கள் வழங்கினர்.
ஆனால், கொள்ளைப்புறமாக இருந்து வந்து கட்சியை அபகரித்தவர்கள், கட்சியின் நிரந்தரப்பொதுச் செயலர் என்ற பதவியை ரத்து செய்துவிட்டனர். தொண்டர்களின் உரிமையை பறித்துவிட்டனர். சர்வாதிகாரத்தின் உச்சநிலைக்கு சென்று அதிமுக-வை தவறான வழிக்கு கொண்டு சென்றுவிட்டனர். 10 மாவட்டச் செயலர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலர்கள் வழிமொழிய வேண்டும், 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணிபுரிய வேண்டும் என நிபந்தனை விதித்து தலைமை பதவிக்கான விதியை திருத்தியுள்ளனர்.
ஒன்றரை கோடி தொண்டர்களின் இந்த அடிப்படை உரிமை பறிக்கப்படுவதை எந்தச் சூழலிலும் விட்டுத்தர மாட்டோம். யார் எந்த ரூபத்தில் வந்து எடுத்தாலும் அதை தடுத்து நிறுத்திகின்ற சக்தியாக தர்மயுத்தம் தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இறுதியில் வெல்வது நாம் தான் என்ற வைராக்கியத்துடன் தமிழக மக்களும் கை கோர்த்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா-வின் சக்தி என்ற உரத்துடன் திருச்சி மண்ணில் ஏப்.24இல் விதைக்கப்படும் விதை துளிர்விட்டு வளர்ந்து அதிமுக சட்ட விதிகளை திருத்திய கும்பலை விரட்டியடிக்கும். அதிமுக 50 ஆண்டுகள் முடிந்து 51ஆவது ஆண்டிலிருந்து நம்மிடமிருந்து அதிமுக தொடரும் என்ற நிலையை வரலாற்றில் பதிவு செய்யும் முப்பெரும் விழாவாக திருச்சி விழா அமையும் என்றார். இந்த விழாவில், ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.சி.டி. பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், அமைப்புச் செயலர் வெல்லமண்டி என். நடராஜன், கொள்கை பரப்புச் செயலர்கள் மருது அழகுராஜ், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்