Rock Fort Times
Online News

திருச்சிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மணி மண்டபங்களில் திடீர் ஆய்வு…!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்று வரும் சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழா நிகழ்ச்சிகள் இன்று(02-02-2025) நடக்கின்றன. இதன் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவர், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள முத்தரையர் மணிமண்டபம், நீதிக்கட்சியின் வைரத்தூணாக விளங்கிய சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் மணி மண்டபங்களை பார்வையிட்டு அவர்கள் மூவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல, அங்கு ரூ.4 கோடியே 3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், மணிமண்டபத்தில் வரலாற்றை விளக்கக்கூடிய புகைப்படங்களை வைக்க வேண்டும் என்றும், மணிமண்டபத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள புதர்களை அகற்றி அழகுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்