திருச்சி அருகே செயல்படும் அதிமுக பிரமுகரின் கல்லூரிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை! வெட்டி விடப்பட்ட கூட்டணியை ஒட்ட வைக்க ஏற்பாடா ?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்று அறியப்படுபவர் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன். இவரது மகன் பிரவீன் குமார் நிர்வகித்து வரும் கல்லூரி திருச்சி மாவட்டம் முசிறி அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று ஜனவரி 11 நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டது தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. தமிழகத்தில் வருகிற 2026ல் நடைபெவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ளன. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கோடு இப்போதே களப்பணியை துவங்கி விட்டது. திமுகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்கிற முனைப்போடு அதிமுக, பாஜக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றன.
ஆனாலும் உதிரியாய் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்றால் மட்டுமே தமிழகத்தில் ஆளும் திமுகவை வீழ்த்த முடியும். எனவே முறிந்துபோன அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் ஒட்டவைக்க வேண்டும் என பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என்று சொன்னாலும், முறைப்படி கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. இதனிடையே திரை மறைவில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உருவாகும் என்றே கருதுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்லூரி விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டது. மேலோட்டமாக பார்த்தால் பொங்கல் விழாவில் ஆளுநர் கலந்து கொண்டது போல தெரிந்தாலும், இது முறிந்த பாஜக. -அதிமுக கூட்டணியை ஒன்று சேர்க்கும் முயற்சியாகவே கருதுகிறார்கள் விபரம் அறிந்த அரசியல் வட்டாரத்தினர்.
இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற மனுவோடு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்தார்கள். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக – தேமுதிக – த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்றே தெரிகிறது. அரசியல் களத்தில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
காத்திருப்போம்.
Comments are closed.