திருச்சியில் உள்ள கல்லூரி அருகே போதை பொருட்களுடன் பிடிபட்ட 3 பேருக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பா?- போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை…!
திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போில், உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன், ஓசிஐயு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது உறையூர் ராமலிங்க நகர் பார்க் அருகே நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் சீனிவாசநகர் கனரா பேங்க் காலனியைச் சேர்ந்த பூஜித் (24), ஈரோடு டீச்சர் காலனியைச் சேர்ந்த ஆல்வின்(23), ராஜா காலனியைச் சேர்ந்த நகுல் தேவ்(21) என்பதும், அவர்களிடம் மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போதைப்பொருள் விற்பனையில் திருச்சி மாநகரில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதும், இவர்களுக்கு தலைவனாக சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் செயல்படுவதும், போதைபொருட்கள் பெங்களூரில் இருந்து திருச்சிக்கு வாங்கி வரப்பட்டு மாநகர் முழுவதும் விற்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனால், அவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவர்களைப் பிடிக்க 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.