நடிகர் விஜய் எனக்கு எதிரி அல்ல, திமுக தான் எதிரி: ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டி- திருச்சியில் சீமான்…!
திருச்சி, கரூர் ரோடு, தாஜ் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் “அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு” நிகழ்வு இன்று (22-12-2024) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை திருப்போரூர் முருகன் கோவிலில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோனை திருப்பி தர முடியாது என இந்து சமய அறநிலைத்துறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்டியலில் வெடிகுண்டை தூக்கி போட்டு இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? என்று கூறினார். மேலும், சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- கேள்வி:-நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சி காரணமாகவே நீங்கள் ஆயிரம் இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வுகளை நடத்துகிறீர்களா? பதில் :-“ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி. அவரை இதில் இழுத்து விடாதீர்கள். ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள். திமுகதான் எனது எதிரி கேள்வி :- இஸ்லாமியர்களுடைய வாக்குகளை பெறுவதற்காக நீங்கள் முயற்சி செய்வதாக அண்ணாமலை கூறுகிறாரே? பதில் :-இஸ்லாமியருடைய ஓட்டுக்களை பெறுவத்தற்காவே நாங்கள் பாட்ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார்.
அவர் யாருடைய ஓட்டை பெறுவதற்காக கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்?. இஸ்லாமியர்கள் ஒருபோதும் எனக்கு வாக்களித்ததில்லை. அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனக்கு உடன் பிறந்தார்கள் என்ற எண்ணத்திலேயே அவர்களுடன் உறவு பாராட்டுகிறேன். அவர்களுடைய ஐந்து கடமைகளில் ஆறாவது கடமையாக, திமுகவுக்கு வாக்களிப்பதையே தீர்மானமாக வைத்திருக்கின்றனர் அவர்களது இறைத்தூதரே வந்து சொன்னால் கூட அவர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்துவதை விட மாட்டார்கள். கேள்வி:-ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? பதில் :-ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம். அதுவும் தனித்து போட்டியிடுவோம்- திமுக சார்பில் அங்கு இடைத்தேர்தலில் பணியாற்றக்கூடிய செந்தில் பாலாஜியை பார்த்து நாங்கள் பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா? பணம் கொடுத்தால் தான் திமுகவினர் தேர்தல் வேலைகளை செய்வார்கள். அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் அவரைப் பார்த்து பயப்பட வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
Comments are closed.