ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த மாதம் 15-ந்தேதி இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். லேசான இருதய பிரச்சினைக்காக சிகிச்சைபெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதியடைந்ததாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகின. தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருதய பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றுக்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
