திருச்சி புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை: துறையூரில் 10 ஏரிகள் நிரம்பின, வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி…! ( வீடியோ இணைப்பு)
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். மழையின் காரணமாக திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையினால் 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும், பெருமாள் மலை அடிவாரம் அருகே 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவிலிருந்து பெய்து வரும் மழையால் இந்த குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வருடம் தோறும் மழை வரும் போதெல்லாம் இதுபோன்று குடியிருப்புகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து விடுகிறது. இதனால், தங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். எங்கள் குடியிருப்பு பகுதியைச் சுற்றி இனி மழை நீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Comments are closed.