ஆன்லைன் மோசடி பேர்வழியிடம் வசமாக சிக்கிக் கொண்ட ஓய்வு பெற்ற பெண் அதிகாரி- ரூ.1 கோடியே 61 லட்சத்தை இழந்தார்…!
திருச்சி, ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி தேவகி (வயது 65). இவர், மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர், டிஎச்எல் கொரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, சீனாவுக்கு அனுப்ப ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் உங்களது ஆதார் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆதார் எண்ணில் பெரிய அளவில் பணமோசடி நடந்துள்ளது. இதற்கு பெரிய தொகை அபராதம் செலுத்த வேண்டி வரும். நாங்கள் உச்சநீதிமன்றத்தில் உங்கள் அபராத தொகையை செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுத் தருகிறோம் என கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த தேவகி, தனது வங்கி கணக்கு விவரங்களை மேற்கண்ட மோசடி பேர்வழிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் உங்களை கைது செய்யாமல் இருக்க உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டும் என மோசடி பேர்வழி கூறியுள்ளார். அதை நம்பிய தேவகி தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடியே 61 லட்சத்தை அந்த மோசடி பேர்வழியின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவரது பணம் திருப்பி அனுப்பப்படவில்லை. தேவகி அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தேவகி ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.