கோவில்பட்டி அருகே பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்த பள்ளி மாணவன், நகைக்காக கொலை செய்யப்பட்டானா?- களத்தில் இறங்கிய போலீஸ் படை …!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த கார்த்திக்முருகன்- பாலசுந்தரி தம்பதியின் இரண்டாவது மகன் கருப்புசாமி (வயது 10). அங்குள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கருப்புசாமி, கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில், கார்த்திக் முருகனும், பாலசுந்தரியும் வேலைக்கு சென்று விட்டனர். கருப்புசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளான். சற்று நேரத்தில் வீட்டில் இருந்த கருப்புசாமி திடீரென மாயமாகியுள்ளான். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாலமுருகனும், பாலசுந்தரியும் மகனை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உறவினர்கள் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், சிறுவனை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான சிறுவனை தேடினர். அப்போது காணாமல் போன சிறுவன் கருப்புசாமி பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்தான். இதனைப் பார்த்து தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் மோதிரம் காணாமல் போய் இருந்தது. ஆகவே, நகைக்காக சிறுவனை யாரோ கொலை செய்து இருக்கலாம் என்பது தெரிய வந்தது. சிறுவனை கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments are closed.