ஓம் சக்தி… பராசக்தி … கோஷங்கள் முழங்க திருவானைக்காவல் மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவானைக்காவலில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படும் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயில் மட்டுமல்லாது, இவ்வூர் மக்களுக்கும் எல்லை காவல் தெய்வமாக பிடாரி இரணியம்மன், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக் கொண்டையம்பேட்டையில் வீற்றிருக்கிறார். ஆதிகாலத்தில் காடாக இருந்ததால் அப்பகுதி மக்கள் செல்வதற்கு அச்சப்பட்ட காரணத்தினால், அதன் பதுவுகோயில் சன்னதி வீதியில் நிர்மாணம் செய்யப்பட்டது. இங்கு மஹா காளியம்மன் என்ற பெயரில் சித்திர வடிவில் காளியம்மன் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். திருவானைக்காவல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இக்காளியை வணங்கிச் செல்வதால் பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று(05-12-2024) காலை 11 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, திருச்சி நாகநாதர் கோயில் அர்ச்சகர்கள் சிவக்குமார், சசிகுமார் சிவாச்சாரியார் தலைமையில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கடங்களில் நிரப்பப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, வேத, மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, தாரை தப்பட்டைகள் இசைக்க, இன்று காலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர், கடத்தில் இருந்த புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தேறியது. கும்பாபிஷேகத்தின் போது, மூன்றுக்கும் மேற்பட்ட கழுகுகள் வானில் வட்டமடித்தன. இதைக்கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் “ஓம்சக்தி்.. பராசக்தி…” என்று கோஷங்களை எழுப்பினர். விழா ஏற்பாடுகளை, திருவானைக்காவல் பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேத்தையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.
Comments are closed.