Rock Fort Times
Online News

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி- குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை…! ( வீடியோ இணைப்பு)

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வசூலை வாரி குவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா-2 இன்று(05-12-2024) வெளியாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லாததால் புஷ்பா- 2 படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டது. மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் கணவர், குழந்தைகளுடன் புஷ்பா- 2 சிறப்புக் காட்சி பார்ப்பதற்காக அதிகாலையிலேயே வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் மயக்கமடைந்த ரேவதிக்கு (வயது 39) அங்கிருந்த காவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்