ஸ்ரீரங்கத்தில் லாட்ஜில் தங்கியிருந்த போட்டோகிராபரிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கேமரா,பொருட்கள் திருட்டு: 2 வாலிபர்களுக்கு வலை…!
மதுரை மாவட்டம், பறவை இளங்கோ தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மகன் குருதேவ் (வயது 22). போட்டோகிராபர். மதுரையில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் மூலம் ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் இவரிடம் அறிமுகமாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் தன்னுடைய தங்கைக்கு திருமணம் நடைபெற்று விட்டதாகவும், திருச்சி, தஞ்சை குடந்தை பகுதிகளில் புதுமணத் தம்பதிகளை வைத்து போட்டோ சூட் எடுக்க வேண்டும் என்று கூறி குருதேவை அழைத்துக் கொண்டு திருச்குசிக் மூன்று பேரும் வந்துள்ளனர், பிறகு திருச்சி திருவானைக்காவல்யை அடுத்த செக்போஸ்ட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து மூன்று பேரும் தங்கினர். மாலை நேரத்தில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இரவு 3 பேரும் அறைக்கு திரும்பினர். அப்போது ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களும் காலையில் புதுமண தம்பதியினர் வந்து விடுவார்கள் அவர்களை வைத்து பல்வேறு பகுதிகளில் போட்டோ சூட் எடுக்க வேண்டும். ஆகவே இரவு சீக்கிரம் தூங்கி விடலாம் என்று கூறியுள்ளனர். அதனை ஏற்று மூன்று பேரும் தூங்கினர். அப்போது நள்ளிரவு திடீரென்று இரண்டு வாலிபர்கள் கண்விழித்து அறையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் கேமரா தொடர்பான பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து நைசாக வெளியேறி விட்டனர். காலையில் எழுந்து பார்த்த குருதேவ் தன்னுடைய கேமரா காணாமல் போனதையும், அறையில் தங்கியிருந்த இரண்டு வாலிபர்கள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்த பொழுது நள்ளிரவு இரண்டு வாலிபர்களும் கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்து சாலையில் நின்ற காரில் புறப்பட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கார் எண்ணை வைத்து டிரைவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரையும் நாமக்கல் அழைத்துச் சென்று இறக்கி விட்டதாகவும், அதன் பிறகு அந்த வாலிபர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.