மண்ணச்சநல்லூரில், குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…!( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம், துறையூர் – திருச்சி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி அருண் நேருவின் அலுவலகம் மற்றும் துறையூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று 23ம் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் துறையூருக்கு புறப்பட்டுச் சென்றவருக்கு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையில் நம்பர் ஒன் டோல்கேட், மண்ணச்சநல்லூர் எதுமலை சாலை, திருவெள்ளறை கடைவீதி ஆகிய இடங்களில் திமுக கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணியளவில் மண்ணச்சநல்லூர் மார்க்கெட் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க கையில் குழந்தையுடன் நின்ற இளம் பெண்ணை கண்டு திடீரென வாகனத்தை நிறுத்த கூறினார். பின்னர் அந்த பெண் உதயநிதி ஸ்டாலினிடம், தான் துறையூர் கீரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், எனது பெயர் சுபத்ரா கணவர் பெயர் ரவி என்றும், பிரசவத்திற்கு தனது அண்ணன் முன்னாள் திமுக வார்டு உறுப்பினர் செந்தில்குமார் வீட்டிற்கு வந்ததாகவும், தனது குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து அந்தக் குழந்தையை பெற்று உச்சி முகர்ந்த உதயநிதி ஸ்டாலின் அந்த குழந்தைக்கு தமிழ்செல்வி என தமிழ் பெயரை சூட்டி முத்தமிட்டு தாயிடம் கொடுத்தார். இதுகுறித்து குழந்தையின் தாய் மாமன் கூறுகையில், எனது தங்கை சுபத்ராவிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரசவம் நடைபெற்று பெண் குழந்தை பெற்ற நிலையில் அந்தக் குழந்தைக்கு துணை முதலமைச்சர் பெயர் சூட்ட வேண்டும் என்று நானும் எனது தங்கையும் ஆசைப்பட்டோம். அவர் திருச்சி வரும் பொழுது குழந்தையை நேரில் கொடுத்து பெயர் வைக்கலாம் என்று காத்திருந்தோம். நாங்கள் நினைத்தபடியே குழந்தைக்கு பெயர் வைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
Comments are closed.