Rock Fort Times
Online News

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?- தமிழக வெற்றிக் கழகம் பரபரப்பு அறிக்கை…!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கூடிய கூட்டம் அரசியல் கட்சியினரின் புருவத்தை உயரச் செய்துள்ளது. விஜய் கட்சியுடன் கூட்டணி சேர சில அரசியல் கட்சிகள் காய் நகர்த்த தொடங்கி உள்ளன. அதில், அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத் தலைவர் விஜய் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகைய பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் விஜய் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாகவெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒற்றுமையாக இல்லாவிட்டால் எதிர்கட்சியாகவே இருக்கவேண்டியதுதான் - முன்னாள் அமைச்சர் தங்கமணி காட்டம்..!

1 of 914

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்