Rock Fort Times
Online News

உலகிற்கு அறம், நீதி, ஞானத்தை போதித்தது தமிழ் மண் தான்- திருச்சி வழக்கறிஞர்கள் சங்கவிழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேச்சு…!

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க 135-வது ஆண்டு விழா திருச்சியில் நடந்தது.   சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார். விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி  ஆர்.மகாதேவன்  கலந்துகொண்டு பேசுகையில், உலகத்துக்கு ஞானத்தை வாரி வழங்கிய மொழி தமிழ் மொழி. அத்தகைய பெருமைக்குரிய தமிழின் மேன்மையை வளர்த்தெடுத்ததில் சிராப்பள்ளி என சமய இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட திருச்சிக்கும் உண்டு. நீதியை அறம் என்று சொல்லி வளர்த்தெடுத்தது தமிழ் மண் மட்டுமே.  2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியங்களில் அறத்தை போதித்திருக்கிறது. தொல்காப்பியத்திலும் சான்றுகள் உள்ளன. வாழ்க்கை என்பது அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், மன்னருக்குரிய அறம், பொருள், இன்பம் எவை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்டியது நமது சங்க இலக்கியங்களே.  நீதி பரிபாலனம் எப்படி விளங்க வேண்டும் என்பதையும் முதன்முதலில் உலகிற்கு எடுத்துக்காட்டியது தமிழ் மண்தான். நீதி என்பது வழக்கறிஞர் ஒருபகுதி, நீதிபதி ஒரு பகுதியாகும். இருவரும் இணைந்து இரு தண்டவாளங்கள் போல செயல்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் அதன்மீது சிறப்பாக பயணிக்க முடியும். உலகிலேயே சமுதாயத்துக்கு பணியாற்றும் ஒரு சிறந்த தொழில் சட்டத் தொழில் மட்டுமே. அத்தகைய தொழிலில் பணிபுரியும் வழக்குரைஞர்கள், பணம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணிபுரியக் கூடாது. சமுதாயத்துக்கான பணி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சமுதாயத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும். அறம், நீதி, ஞானத்தை மட்டும் உலகிற்கு தமிழ் மண் எடுத்துக் கூறவில்லை. போர் முறையையும் குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் என்ற பெயரால் மக்கள் வாழும் பகுதியில் அணுகுண்டு வீசப்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். அந்த நாட்டு அதிபர் போர் குறித்து கூறுகையில், வெற்றி ஒன்றே குறிக்கோள். அதற்கு எதிரி வீழ்த்தப்பட வேண்டும் என்கிறார். ஆனால், 2 ஆயிரம் ஆண்டுக்கு முன் தமிழ் மண்ணில் போருக்கு செல்லும் முன்பாக, எதிரி நாட்டின் பசுக்கள், அறிவாளிகள், பிணியால் வாடுவோர், இறுதிச்சடங்கு செய்ய வாரிசு இல்லாத முதியோர் ஆகியோரை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு போருக்கு வருமாறு ஓலை அனுப்புவது மன்னரின் மாண்பு எனக் குறிப்பிடுகிறது. எங்கும், எப்போதும் தமிழ் மண்தான் உலகிற்கு மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், திருச்சி மாவட்டத்துக்கான நிர்வாகம் சார்ந்த நீதிபதியுமான எம்.எஸ். ரமேஷ் பேசுகையில், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு சேம்பர் வேண்டும் என்ற கோரிக்கையை அங்கீகரித்து நீதிமன்ற கட்டட குழுவுக்கு அனுப்பியுள்ளேன். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. இளங்கோவன் பேசுகையில், நீதித்துறையிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. மாறி வரும் மாற்றத்துக்கேற்ப வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பார் கவுன்சில் மூலமாக தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டும் என்றார்.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.முரளி சங்கர் பேசுகையில், நீதிபதிகளுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. மூத்த வழக்கறிஞர்களிடம் இளம் வழக்கறிஞர்களுக்கு போதிய பயிற்சியின்மையே இதற்கு காரணம். எனவே, படிப்பு முடிந்தவுடன் நேரடியாக வழக்கறிஞர் தொழிலுக்கு வராமல் மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெற்று வர வேண்டும் என்றார்.  இந்த விழாவில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர், வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர்  எஸ். பாலசுப்பிரமணியன், செயலாளர் கே. சுகுமார், துணைத்தலைவர் ஜே. மதியழகன், இணைச் செயலர்கள் எம். அப்துல்சலாம், எஸ். சந்தோஷ்குமார்,  செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்