நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று(11-11-2024) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்து மிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது. அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது.மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும , மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.