நடுவானில் விமானம் பறந்த போது தஞ்சையைச் சேர்ந்த வாலிபருக்கு திடீரென உடல் நலக் குறைவு- இலங்கையில் தரையிறக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பயனின்றி உயிரிழந்தார்…!
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பயணியும் பயணம் செய்தார். அந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் விமான பணியாளர்களிடம் தெரிவித்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இலங்கை வான் பகுதியில் விமானம் பறந்த போது, அந்த பயணி இருக்கையிலிருந்து சரிந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த விமானி, விமானத்தை அவசரமாக இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார். விமான நிலையத்தில் மருத்துவக்குழுவினர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக விமானம் சில மணிநேரம் கொழும்பு நகரில் காத்திருந்து அதன் பின்னர் திருச்சிக்கு சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. இறந்தவரின் உடல் கொழும்பு நகரில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை திருச்சி விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது தகவல் தர மறுத்து விட்டனர்.
Comments are closed.