Rock Fort Times
Online News

லால்குடி அருகே இறந்த மூதாட்டி யின் உடலை கழுத்தளவு தண்ணீரில் எடுத்துச் சென்ற அவலம்: உப்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியம், மருதூர் ஊராட்சிக்கு உட்பட்டது நேரு நகர்.  இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அப்பகுதியில் மயானம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அவர்கள் இறந்தவர்களின் உடலை புதைத்து வருகின்றனர்.  இந்தப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக உப்பாற்றை கடந்து சென்று இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த உப்பாற்றில் மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் செல்லும்.  அப்போது இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு சிரமப்பட்டு வருகிறோம்.  இதனால் உப்பாற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.  ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  வடகிழக்கு பருவமழையின் காரணமாக உப்பாற்றில் அதிகளவு காட்டாற்று வெள்ளம் செல்கிறது.  இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தில் 98 வயது மூதாட்டி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அந்த மூதாட்டிக்கு இறுதி சடங்குகள் முடிவடைந்து அவரது இல்லத்தில் இருந்து மயானத்திற்கு ஊர்வலம் புறப்பட்டது. ஆனால், மயானத்திற்கு கொண்டு செல்லும்
வழியில் ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை. வேறு வழியின்றி மூதாட்டியின் உடலை சுமந்து சென்றவர்கள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி எடுத்து சென்று ஈமச்சடங்கு செய்து தகனம் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மயானத்திற்கு செல்வதற்கு பாலம் அமைக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஆற்றில் தண்ணீர் இல்லை என்றால் பிரச்சனை இல்லை. தற்போது கழுத்தளவுக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. அதனால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். ஆகவே, இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி எடுத்துச்  செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்