Rock Fort Times
Online News

ஒவ்வொரு மாவட்டத்திலும் “ஆதரவு இல்லம்” தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்- திருச்சி மனிதம் டிரஸ்ட் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மனிதம் டிரஸ்ட் சார்பில் விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் சிட்டி அரங்கில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான இன்பஒளி -2024 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகவும், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.இனிகோ இருதயராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டத்தின் முன்னணி தலைவர் தோழர்.சுரேஷ், சமூக பணியில் பத்மஶ்ரீ விருது வென்ற திருச்சி ஸ்கோப் ட்ரஸ்ட் சுப்புராமன், தேசிய கல்லூரி முதல்வர் முனைவர் பிரசன்னா பாலாஜி, திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியின் டீன் முனைவர்.சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொணடனர்.

நிகழ்வில், மனிதம் டிரஸ்ட் தினேஷ், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆதரவு இல்லம் தொடங்க வேண்டும். சிறப்பு குழந்தைகளுக்கு அரசே நேரடியாக சிறப்பு பள்ளி நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா காலகட்டத்தில் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்ட நேரத்தில் காவிரி பாலத்தில் உணவுக்காக காத்திருந்தவர்களுக்கு தேடிச்சென்று உணவு வழங்கிய வள்ளலார் தினேஷ். பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும், அவருடைய அன்பிற்காகவும், நேர்மைக்காகவும் இங்கு நாங்கள் எல்லாம் வந்து முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறோம். தினேஷ் இங்கே பேசும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆதரவு இல்லம் இருக்க வேண்டும், சிறப்பு பள்ளியை அரசே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அதுவும் அந்த திட்டத்தை திருச்சியில் இருந்து தொடங்குவோம் என்று கூறினார்.
நிகழ்வில் 250 குழந்தைகள், 150 முதியோர்கள், பெண்கள் மற்றும் மனிதம் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மனிதம் டிரஸ்ட்டை சேர்ந்த 120 குழந்தைகள், முதியோர் இல்லத்தில் உள்ள 50 நபர்கள் மற்றும் ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 30 குழந்தைகள், திருநங்கைகள் 6 பேர் என அனைவருக்கும் தீபாவளி புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி தீபாவளி வாழ்த்து கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்