Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேண்டுமா?- அரசு சார்பில் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் “ரெடி”…

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை அவரவர் தங்களது சொந்த ஊர்களில், தங்களது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடும் வகையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமையும் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. ஆக, வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக  4 நாட்கள் விடுமுறை வருகிறது. விடுமுறை விட்டால் போதுமா? சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் வசதி வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு அதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று(21-10-2024) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து கூடுதல் செயலாளர் உள்ளிடோர் பங்கேற்றனர்.அதில் எத்தனை சிறப்பு பஸ்களை இயக்குவது, சென்னையில் இருந்து மற்றும் பிற கோட்டங்களில் இருந்து எத்தனை பஸ்களை இயக்குவது, எந்தெந்த ஊர்களுக்கு எந்த பகுதிகளில் இருந்து பஸ்களை இயக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தீபாவளியையொட்டி  வருகிற 28-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.  சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 176 பஸ்களும், பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்து 910 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம்,  கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை திரும்ப வசதியாக 9 ஆயிரத்து 441 பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 நாட்களில் சுமார் 5.83 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்