Rock Fort Times
Online News

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை…!

செல்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் பூர்விகா, கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ். பூர்விகா நிறுவனத்தின் பிரதான கிளை சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன் மட்டுமின்றி டேப்லெட்கள் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் இன்று(17-10-2024) காலை 7.35 மணி முதல் 10க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களை தவிர்த்து புதிதாக வெளியிலிருந்து வரும் ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை பள்ளிக்கரணை மற்றும் இந்த நிறுவனம் தொடர்புடைய மற்றொரு இடத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், செல்போன் விற்பனையில் தொடர்ந்து முன்னணி நிறுவனமாக இருந்து வரும் பூர்விகா நிறுவனத்தின் கணக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்