Rock Fort Times
Online News

ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பு – ராகுல், பிரியங்கா காந்தி பங்கேற்பு…!

நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைக்கும் பணிகளை தேசிய மாநாடு கட்சி முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 10ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா நடத்திய இந்த கூட்டத்தில் அனைத்து புதிய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக (முதல்-மந்திரி) தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.இதையடுத்து, கடந்த 11ம் தேதி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா சந்தித்தார். அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று(16-10-2024) பதவியேற்க துணை நிலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.  இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 5 மந்திரிகள் பதிவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் டி.ராஜா, திமுக சார்பில் கனிமொழி, என்சிபி சார்பில் சுப்ரியா சூலே, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் தேசிய மாநாடு கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்