மழை, வெள்ளம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை…!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஷ்ணு
மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் முக்கொம்பு மேலணையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1 லட்சம் காலி பைகள் மணல் நிரப்புவதற்கு தயாராக உள்ளது. 20 ஆயிரம் மணல் மூட்டைகள் மணல் நிரப்பப்பட்டு தயாராக உள்ளன. தேவை இல்லாமல் ஆறுகளில் இறங்கி குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வாய்க்கால்கள் 420 கிலோ மீட்டருக்கு தூர்வாரப்பட்டுள்ளது.தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்த மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களில் பாதிப்பு இருந்தால்,எவ்வளவு பாதிப்பு என்பதை கணக்கிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள 178 ஏரி குளங்களில், 16 ஏரிகள் 70% நிரம்பியுள்ளது. 28 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. 49 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பி உள்ளது. 39 ஏரிகள் நீர் இல்லாமல் காணப்படுகிறது. மழை வெள்ளம் பாதிப்பு குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்ப கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Comments are closed.