Rock Fort Times
Online News

‘சிங்கப்பூர் சிவாஜி’ என்று அழைக்கப்பட்ட அசோகன் காலமானார்…! (வீடியோ இணைப்பு)

தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை  யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கலைத் தாயின் பிதாமகன் அவர். அவரை பின்பற்றாத நடிகர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்களில் ஒருவர்தான் சிங்கப்பூரைச் சேர்ந்த அசோகன் (வயது 60).  சிவாஜி கணேசனின் நடிப்பால் கவரப்பட்ட இவர் சிவாஜி கணேசனை போலவே வேடமிட்டு  சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.  அவரை அனைவரும் ‘சிங்கப்பூர் சிவாஜி’ என்று அன்புடன் அழைப்பதுண்டு. ஆடைகள், முக ஒப்பனை, பாவனைகள் என அனைத்திலும் நடிகர் திலகம் சிவாஜியை அவர் தத்துரூபமாகப் பிரதிபலித்தார். சிவாஜி போல வேடமிட்டு அவர் பேசும்போது நிஜத்தில் நடிகர் திலகம் போன்றே தோன்றும். இந்தநிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பாட்டுக்கு ஆடி முடித்த சில வினாடிகளில் சரிந்து விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் காணொளியில் பதிவானது. அவரது மரணம் குறித்து பலரும் அதிர்ச்சி, கவலையை வெளிப்படுத்திச் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். அசோகனின் மறைவு சிங்கப்பூரின் கலைத்துறைக்குப் பெரும் இழப்பு என்றும் பலரும் கூறினர். உயிர் வாழ்ந்த கடைசி நிமிடம் வரை மக்களுக்கு நிகழ்ச்சிகளைப் படைத்த அவரை உண்மையான கலைஞர் என்று பலரும் மெச்சினர். அவர் மலேசியாவிலும் பல மேடை நிகழ்ச்சிகளை படைத்தார். ‘சிங்கப்பூர் சிவாஜி’ என்ற ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அசோகனின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றனர் ரசிகர்கள். அவரது இறுதிச்சடங்கு நாளை செவ்வாய்க்கிழமை (15 அக்டோபர்) நடக்கிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்