பிறந்தது விடிவுகாலம்- திருச்சியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் திறப்பு – கார்களை நிறுத்த 6 மணி நேரத்திற்கு ரூ.50; இருசக்கர வாகனத்திற்கு ரூ.15 கட்டணம் நிர்ணயம்…!
திருச்சி மாநகரின் மையப் பகுதியான என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி, தேரடி கடைவீதி, மேலபுலிவார்டு ரோடு பகுதியை சுற்றி பிரபலமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் ஜவுளி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் இந்த பகுதிகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பண்டிகை காலங்களில் இங்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை அங்கும்,இங்குமாக நிறுத்தி விட்டுச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்ட திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வாகனம் நிறுத்த பன்னடுக்கு கட்டிடம் கட்ட முடிவு செய்தது. அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறை சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மேலரண் சாலை கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் அருகே 21 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டன.

இதனை ,கடந்த 2023 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார். இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் தரைதளத்தில் 23 கடைகள் மற்றும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் ஒரே நேரத்தில் 150 கார்கள், 550 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. திறக்கப்பட்டு பல மாதங்களாகியும் இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு இந்த வாகன நிறுத்தமிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின்பேரில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடத்தை தீபாவளி பண்டிகை முடியும் வரை மாநகராட்சி ஊழியர்களை வைத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு இன்று(14-10-2024) காலை திறக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரூ.15ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரூ.50ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வந்துள்ளது. வாகன ஓட்டுநர்கள் இந்த வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆணையர் சரவணன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.